பெண் இயக்குநர்கள் சினிமாவில் சாதிப்பது, தாக்குப்பிடித்து நிலைத்து நிற்பது கடினம் என்கிற சூழல் தான் தற்போது வரை நிலவி வருகிறது. அதில் விதிவிலக்காக சுதா கொங்கரா போன்று ஒரு சில பெண் இயக்குனர்கள் தங்கள் திறமையை நிரூபித்து, ரசிகர்கள் விரும்பும் பாணியிலான கமர்சியல் சினிமாவில் சாதித்து வருகிறார்கள்.
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களின் மூலம் கிட்டத்தட்ட முன்னணி இயக்குனர் ஆகவே மாறிவிட்டார் சுதா கொங்கரா. தற்போது இன்னும் ஒருபடி மேலே போய் தான் இயக்கிய சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாரை வைத்து இயக்க உள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் சுதா கொங்கரா. இந்தப்படம் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக இருந்தாலும், முந்தைய படத்தை போல யாருடைய வாழ்க்கை சரித்திரமாகவும் இந்த படம் உருவாகவில்லை என்பதையும் சுதா கொங்கரா இப்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
அது மட்டுமல்ல சூரரைப்போற்று படத்தை இயக்கியதை விட இந்த புதிய படத்தை இயக்குவதில் தான் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருக்கிறேன். காரணம் அந்தப் படத்தை விட இது மிகப் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது” என்று கூறியுள்ளார் சுதா கொங்கரா.