கடந்த சில நாட்களாகவே மீடியாவில் சர்ச்சைக்குரிய விதமாக நடிகர் விமலின் பெயர் அடிபட்டு வருகிறது. அவர் ஏற்கனவே தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்திற்காக தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை என்று ஒருவர் புகார் அளிக்க, இன்னொரு பக்கம் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலனும் தன் பங்கிற்கு விமல் மீது மோசடி புகார் ஒன்றை அளித்திருந்தார்.
ஆனால் அவர்கள் இருவர் மீதும் நடிகர் விமலும் பதிலுக்கு மோசடி புகார் அளித்தார். பிரச்சனை இப்படி நீண்டு கொண்டே போகிறதே என்கிற கவலை ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் நடிகர் விமல்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில், சம்பந்தப்பட்ட இரண்டு தயாரிப்பாளர்களிடமும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதுடன், இந்த வருடம் முடிவதற்குள் நிறைய படங்களில் நடித்து அவர்களது கடன்கள் முழுவதையும் செட்டில் செய்வதுடன் தானும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும் அவர்களையும் நிம்மதியாக இருக்க செய்வேன் என்றும் உறுதி அளித்துள்ளார் விமல்.
தற்போதைய சூழலில் மினிமம் கியாரண்டி கதாநாயகனாக வலம் வரும் விமல் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் அதில் இருந்து வெளியே வருவதற்கான முயற்சியை முன்னெடுத்து உள்ளதை திரையுலகில் பலரும் பாராட்டி வருகின்றனர்.