V4UMEDIA
HomeNewsKollywoodஎழுத்தாளர் பாலகுமாரனுக்கு மரியாதை செய்ய முன்வந்த பயணிகள் கவனிக்கவும் படக்குழு

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மரியாதை செய்ய முன்வந்த பயணிகள் கவனிக்கவும் படக்குழு

இன்றைய காலகட்டத்தில் ஏற்கனவே வெளிவந்த ஹிட்டான படங்களின் பெயர்களில் ஏகப்பட்ட சீரியல்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இன்றைய தேதியில் கூகுளில் பழைய படத்தின் பெயரை போட்டு தேடினால் கூட அந்த பெயரில் ஒளிபரப்பாகும் இன்றைய சீரியலை தான் காட்டுகின்றன. அந்த அளவிற்கு பழைய பெயர்களில் வெளியான படங்கள் மறைக்கப்பட்டு வருவது வேதனையான ஒன்றுதான்.

அதேபோல ஏற்கனவே ரசிகர்களிடம் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர்களின் நாவல்களின் பெயர்களையும் பலர் தங்களது படங்களுக்கு தலைப்பாக வைப்பதுண்டு. பெரும்பாலும் நாவலின் பெயரில் வெளியான கதையே எழுத்தாளரின் அனுமதியுடன் படமாக வெளியாகும்போது பிரச்சனை ஏற்படுவது இல்லை.

ஆனால் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு எழுதி பிரபலமான பயணிகள் கவனிக்கவும் என்கிற நாவலின் பெயரை தற்போது விதார்த் நடித்துள்ள படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளார்கள். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது.

ஆனால் இதற்காக அவர்கள் எழுத்தாளர் பாலகுமாரனின் குடும்பத்தினரிடம் உரிய அனுமதி வாங்கவில்லை. இதுகுறித்து பாலகுமாரனின் மகன் சூர்யா வழக்கறிஞர் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் அதன்பின்னரே படக்குழுவினர் பதறிப்போய் பாலகுமாரனின் வீட்டிற்கே நேரடியாக தேடிச் சென்று அவரது மகனை சந்தித்துள்ளனர்.

பாலகுமாரன் எழுதிய கதைக்கும் இந்த படத்தின் டைட்டிலும் சம்பந்தமில்லை என்றும் இந்த கதைக்கு பொருத்தமாக இருந்ததால் தான் இதை தலைப்பாக வைத்து உள்ளோம் என்றும் மற்றபடி வேறு உள்நோக்கம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினர்.

அதை பொறுமையாக கேட்டுக்கொண்ட சூர்யா பாலகுமாரன் தனது தந்தையின் பெயரை நன்றி கார்டில் மட்டும் இடம்பெறச் செய்தால் போதும் என்று பெருந்தன்மையுடன் கூறிவிட்டார். படக்குழுவினரும் அதற்கு ஒப்புக்கொண்டு இந்த பிரச்சனையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற விக்ருதி என்கிற படத்தின் ரீமேக்காகத்தான் இந்த பயணிகள் கவனிக்கவும் படம் உருவாகியுள்ளது இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். மெட்ரோ ரயிலில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு முழு படத்தையும் நகர்த்துவதற்கு தொடர்புடையதாக அமைந்துள்ளதால் பயணிகள் கவனிக்கவும் என்கிற டைட்டில் வைத்துள்ளார்கள் என்று தெரிகிறது.

Most Popular

Recent Comments