நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை அடுத்து படக்குழுவினர் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா என்கிற சிங்கிள் ட்ராக்குகளையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே விஜயின் ஆக்சன் அவதாரத்தை வெளிப்படுத்தும் விதமாக போஸ்டர்களும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி வந்தன.
நேற்று அதற்கு நேர்மாறாக அப்படியே உல்டாவாக விஜயின் அப்பாவி முகத்தையும் காமெடி உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக ஒரு புகைப்படம் வெளியானது. இதில் பூஜா ஹெக்டே சுவற்றின் ஓரமாக நின்று எட்டிப்பார்க்க அவருக்குப் பின்னால் காமெடி நடிகர்கள் பட்டாளம் ரயில் பெட்டி போல வரிசையாக நிற்கிறது.
இதில் கடைசியாக நிற்கும் நபர் சாட்சாத் விஜய் தான். கூட்டத்தில் கூட தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளாமல் வரிசையில் கடைசியாக நின்று அப்பாவி போல அவர் பார்ப்பதை பார்க்கும்போது படத்தில் காமெடி காட்சிகளுக்கு நிச்சயம் பஞ்சமிருக்காது என்று நன்றாகவே தெரிகிறது.