புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் கதாநாயகியாக, சின்னத்திரை தயாரிப்பாளராக என தமிழ் சினிமாவில் பல வருடங்கள் தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகை குட்டி பத்மினி. கடந்தமுறை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றபோது அதில் ரொம்பவே ஆக்டிவாக செயல்பட்டு தனது பங்களிப்பை தந்தார் குட்டி பத்மினி.
மேலும் அதைத் தொடர்ந்து அரசியலிலும் நுழைந்த குட்டி பத்மினி தேசியக்கட்சியான பாரதிய ஜனதாவில் இணைந்தார். இந்தநிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாகவும் இன்னும் சொல்லப்போனால் அரசியலில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்துள்ளார் குட்டி பத்மினி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, “கடந்த பதினோரு வருடங்களாக பிஜேபியில் உறுப்பினராக இருந்து வருகிறேன். இந்த நிலையில் நான் அந்த கட்சியில் இருந்து எனது பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.
என்னுடைய வேலைகள் அனைத்தும் மும்பை பகுதியிலேயே இருப்பதால் என்னால் அரசியலில் நீண்ட நேரம் ஒதுக்கி செயல்பட முடியவில்லை. அதுமட்டுமல்ல அரசியல் என்பது எனது மிகப்பெரிய விருப்பமும் அல்ல.. இருந்தாலும் எப்போதுமே பிஜேபி கட்சியின் நலன்விரும்பியாக நான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்