கிடைச்ச கேப்பில் கிடா வெட்டுவது என்று சொல்வார்களே, அதற்கு ஏற்ற மாதிரி இயக்குனர் வெங்கட்பிரபு செய்த விஷயம் தான் மன்மத லீலை படத்தை அவர் இயக்கியது.. பிரமாண்டமான மாநாடு படத்தை அவர் இயக்கி வந்த சமயத்தில் கொரோனா தாக்கத்தால் அந்தப்படத்தின் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டபோது, சிக்கல் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தும் விதமாக ஒரு கதையை உருவாக்கி அதை இயக்கியும் முடித்தார் வெங்கட்பிரபு.. அந்தப்படம் தான் மன்மத லீலை.
பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்து புகழ்பெற்ற படத்தின் டைட்டிலையே இந்தப்படத்துக்கும் வைத்துவிட்ட வெங்கட்பிரபு, கதையையும் இந்த கால இளைஞர்களை கவர்ந்திழுக்கும் விதமாக அடல்ட்ஸ் ஜானரில் உருவாக்கியுள்ளார். அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ள இந்தப்படம் வரும் ஏப்ரல்-1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கதைக்கும் டைட்டிலுக்கும் ஏற்றவாறு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்..