வட நாடு, தென் நாடு என இரண்டாக பிரிந்து கிடக்கும். கிராமத்தில் அம்மா அப்பா உறவினர்கள் என தென்நாட்டு ஊர் மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருபவர் சூர்யா. வக்கீலுக்கு படித்த சூர்யா தேவைப்பட்ட சமயத்தில் மட்டும் நீதிமன்றத்திற்கு செல்பவர். அதேபோல அமைச்சரின் உறவினர் என்கிற செல்வாக்குடன் வலம் வருபவர் வடநாட்டை சேர்ந்த தொழிலதிபர் வினய். ஆனால் இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் விருந்தாக்கி வருகிறார் வினய்.
இரண்டு ஊருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனையால் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு பின் கொடுக்க மறுக்கின்றனர் இதை மீறி அந்த ஊரில் உள்ள பிரியங்கா அருள்மோகனை திருமணம் செய்கிறார் சூர்யா. இந்த நிலையில்தான் பெண்கள் வினய் குரூப்பால் பாதிக்கப்படுவது சூர்யாவின் கவனத்திற்கு வருகிறது.
அதற்காக நியாயம் கேட்டு நீதிமன்றம் மூலம் போராடும் சூர்யாவை அவரது வீட்டிற்குள்ளேயே புகுந்து பதம் பார்க்கிறார் வினய். கூடவே தந்தை மகன் இருவரையும் ஜெயிலுக்கு அனுப்புகிறார்.. ஜெயிலில் இருந்து வெளிவரும் சூர்யா பாதிக்கப்பட்ட பெண்களின் மானம் காக்க மீண்டும் வக்கீல் கோட்டை அணிந்தாரா ? இல்லை வேட்டியை மடித்து கட்டினாரா என்பது கிளைமாக்ஸ்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் பாண்டிராஜ். நீண்டநாளைக்கு பிறகு கமர்ஷியல் பாணியில் இறங்கி ஆடியுள்ளார் சூர்யா. ஜாடிக்கேத்த மூடியாக சூர்யாவுக்கு பொருத்தமான ஜோடியாக பிரியங்கா அருள்மோகன். கடைசி வரை சூர்யாவுக்கு டப் கொடுக்கும் வில்லனாக வினய்யும் தன் பங்கை சரியாக செய்துள்ளார். சத்யராஜ், சரண்யா தம்பதி சென்டிமென்ட் கலாட்டா என்றால், இளவரசு-தேவதர்ஷினி கூட்டணி காமெடி கலாட்டா. இரண்டுமே ரசிக்கும்படி இருந்தாலும் ஓரளவுக்கு மேல் திகட்டுகிறது.
சூரி, விஜய் டிவி ராமர், கோமாளி புகழ் என நகைச்சுவை பட்டாளம் இருந்தாலும் மூவருக்குமே சரியான தீனி கொடுக்கப்படவில்லையோ என்றே தோன்றுகிறது. இவர்களில் புகழ் ஓரளவு ஸ்கோர் செய்கிறார். பிக்பாஸ் சிபி, வடசென்னை சரண் இருவரும் வில்லன் முகம் காட்டி தாங்கள் சரியான தேர்வுதான் என்பதை நிரூபிக்கிறார்கள்.
இமானின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் பரபரக்க வைக்கிறார். எவ்வளவு இக்காட்டான சூழல் வந்தாலும் பேகல் அதை துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும், ஆண்களின் மிரட்டலுக்கு அடிபணிய கூடாது, ஆபத்தான் சமயத்தில் காவலன் செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பெண்களுக்கு தேவைப்படும் விஷயங்களை படத்தில் அழுத்தமாக சொன்னதற்காக இயக்குனர் பாண்டிராஜுக்கு தாராளமாக கை கொடுக்கலாம்.