கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரியங்கா நடிப்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் அரசியல்வாதிகளின் வருகையின்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்கும் பெண் போலீசார் அனுபவிக்கும் சங்கடங்களையும் வேதனைகளையும் இந்த படம் பொட்டில் அடித்த மாதிரி வெளிப்படுத்தியது.
இந்தப்படம் வெளியான சமயத்தில் காவல்துறையில் பணியாற்றும் அனைத்து பெண்களின் பாராட்டையும் பெற்றது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், பெண்கள் இதுபோன்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் சாலைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட தேவையில்லை என்கிற புதிய உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு ஒரு தாக்கத்தையும் இந்தப்படம் ஏற்படுத்தியது.. இதுதான் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி..
இந்த நிலையில் இந்த படம் ஆஹா டிஜிட்டல் பிரிமியர் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 18 முதல் வெளியாக இருக்கிறது. பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.