1997ல் அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் ஷங்கர் ராஜா. அந்த வகையில் தற்போது வெற்றிகரமாக தமிழ் திரையுலகில் இசை பயணத்தில் தனது 25ஆவது வருடத்தை தொட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. இந்த சந்தோச நிகழ்வை பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடிய யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
ஒரு நாள் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மொபைலில் இருந்து யுவனுக்கு ஒரு புகைப்படம் வந்தது. அதைப்பார்த்து ஷாக்காகி போனார் யுவன். காரணம் அதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், யுவன் ஷங்கர் ராஜா படம் அச்சிட்ட டீசர்ட் அணிந்தபடி காட்சி அளித்துள்ளார். உடனே ஜெகதீஷுக்கு போன் செய்து இதுபற்றி கேட்டபோது விஜய் சாரின் மகன் உங்களது தீவிர ரசிகன் என்பது உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புகைப்படத்தை அனுப்பினேன் என்று கூறினாராம்.
விஜய் சாருக்கு இது தெரியுமா என்று கேட்டதற்கு தன் மகன் யுவன் ரசிகன் என்பதை யுவன் ஷங்கர் ராஜா தெரிந்து கொள்ளட்டும் என்று இந்த படத்தை அனுப்ப சொன்னதே விஜய் சார் தான் என பதில் கூறியுள்ளார் ஜெகதீஷ். ஆனாலும் அதை வெளியே சொல்லி பிரபலப்படுத்த விரும்பாமல் தனது பர்சனல் நினைவுகளிலேயே வைத்துக்கொண்ட யுவன் தற்போது அதை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவின் தீவிர ரசிகன் என்றாலும்கூட விஜய் புதிய கீதை என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். அஜித்துடன் பல படங்களில் பணிபுரிந்த யுவனுக்கு விஜய் படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்காமல் போனது ஒரு ஆச்சரியம் என்றால், அதேபோல 25 வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கர் ராஜா இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திற்கு இசையமைக்க வில்லையே என்பது அவரது ரசிகர்களுக்கும் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய மனக்குறை தான்.