தமிழில் கடந்த ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் வெகு சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார். சமீபத்தில்தான் பிக்பாஸ் சீசன் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் ஒரு புதிய முயற்சியாக பிக்பாஸ் அல்டிமேட் என்கிற நிகழ்ச்சியின் முதல் சீசனை துவங்கினார்கள். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாமல் நேரடியாக ஓடிடி தளத்திலேயே 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி கொண்டே இருக்கும். இந்த நிகழ்ச்சியையும் கமல்தான் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகிறது என்றும் அதனால் அந்த படத்தை முடித்துக் கொடுப்பதற்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்றும் அறிவித்திருந்தார் கமல்..
இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. கடந்த சீசனில் கொரோனா தொற்று காரணமாக கமல் ஒரு வாரம் ஓய்வு எடுத்த நிலையில், அப்போது அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஒருவேளை அவர் தான் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க போகிறாரோ என்று தான் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இது சிம்பு ரசிகர்களை மட்டுமல்லாது பிக்பாஸ் சீசனில் சற்று மாற்றத்தை எதிர்பார்க்கும் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த ஒரு அறிவிப்பாக அமைந்துள்ளது. வரும் வாரத்திலிருந்து சிம்புவின் ராஜாங்கம் எப்படி இருக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.