திரையுலகில் 20 வருடங்களை கடந்த ஸ்ரீகாந்த்
தமிழில் ரோஜா கூட்டம் என்கிற படத்தில் இயக்குனர் சசியால் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் ஸ்ரீகாந்த். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக கடந்த 20 வருடங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். இவருக்கு முன்னும் பின்னும் அறிமுகமான பல ஹீரோக்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்ட நிலையில். ஸ்ரீகாந்த்தின் நடிப்பு பயணம் இன்னும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதுமட்டுமல்ல கலையுலக மார்க்கண்டேயன் என சிவகுமாரை முன்பு சொல்வார்கள் இப்போது தாராளமாக ஸ்ரீகாந்தை சொல்லலாம் என்கிற அளவுக்கு ரோஜாக்கூட்டம் படத்தில் பார்த்தது போலவே அதே தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் காட்சி தருகிறார் ஸ்ரீகாந்த். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இதே போன்ற பிப்ரவரி 22ஆம் தேதியில் தான் ரோஜா கூட்டம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.