குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம்பிடித்துவிட்டார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். தற்போது விஜய் நடிக்கும் படத்தை இயக்கி முடித்துவிட்ட அவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நெல்சன் – அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் அரபிக் குத்து என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கிட்டதட்ட 60 மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை இந்த பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர். சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்தால் அந்தப் பாடல் மெகா ஹிட் என்பது ஏற்கனவே நிரூபணமாகி உள்ளது அதே சமயம் டாக்டர் படத்திற்காக அவர்கள் அப்படி உருவாக்கிய செல்லமா பாடல், படத்தில் எந்த இடத்திலும் இடம்பெறாமல் படம் முடிந்து என்டு கார்டு போடும்போது தான் திரையில் காட்டப்பட்டது இது அப்போதே ரசிகர்களிடம் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த அரபிக் குத்து பாடலும் அதேபோன்று படத்தில் என்டு டைட்டில் கார்டு போடும் சமயத்தில் தான் இடம்பெறும் என ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையோ, பொய்யோ ஆனால் உடனே அதிர்ச்சியான விஜய் ரசிகர்கள் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு, தயவுசெய்து அதுபோன்று மட்டும் செய்து விடாதீர்கள் நெல்சன் இந்த பாடல் படத்தின் இடையிலேயே இடம்பெற வேண்டும் அதை நாங்கள் அப்போதுதான் உற்சாகமாக கொண்டாட முடியும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.