கிராமத்தின் முரட்டுத்தனமான பாசக்கார, கோபக்கார மனிதர்களை இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு விதமாக படம் பிடித்துக் காட்டினார் என்றால், கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை அழகியலோடு படம்பிடித்து காட்டியவர் இயக்குனர் தங்கர்பச்சான்.. கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றி விட்டு, அழகி படத்தில் இயக்குனராக உருமாறி, ஒவ்வொரு இளைஞரின் தூக்கத்தையும் தொலைக்க வைத்தார் தங்கர்பச்சான்.
தொடர்ந்து அவர் இயக்கிய பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட அனைத்து படங்களுமே நம் மனதை வருடிச் செல்லும் படங்களாக கிராமத்து பின்னணியில் அமைந்திருக்கும்.
இந்த நிலையில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது தவிர்க்க முடியாதது என்கிற சினிமாவின் இலக்கணப்படி, தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சானும் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். தங்கர்பச்சானே இயக்கியுள்ள இந்த படத்திற்கு தக்கு முக்கு திக்கு தாளம் என பெயர் வைத்து படப்பிடிப்பை முடித்து கிட்டத்தட்ட ரிலீசுக்கும் தயார் நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் தங்கர் பச்சான்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் கிராமத்து மண்வாசனை படங்களை மட்டுமே இயக்கி வந்த தங்கர்பச்சான், தன் மகனுக்காக, தனது பாணியை மட்டுமல்ல, பாதையையே மாற்றி, கமர்ஷியல் அம்சங்களுடன் நகரத்து பின்னணியில் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் தானே எழுதிய தக்கு முக்கு திக்கு தாளம் என்கிற பாடலையும் தற்போது வெளியிட்டுள்ளார் தங்கர்பச்சான். தரண்குமார் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு தன் காந்தக் குரலால் உயிர் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தேவா.