நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து படத்தில் இருந்து ரசிகர்களுக்கு தேவையான பர்ஸ்ட் லுக், டீசர், லிரிக் வீடியோ என ஒவ்வொன்றாக களம் இறக்க ஆரம்பித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிருத்-நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் மூவரும் இணைந்து உருவாக்கியுள்ள அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அந்த பாடல் உருவாக்கம் குறித்த பில்டப் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த அரபிக்குத்து பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. லிரிக் வீடியோவுடன் போனசாக விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் நடனமாடும் சில காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பாடலாக இது உருவாகியுள்ளது.
அதன் எதிரொலியாகத்தான் யூடியூப்பில் வெளியான இந்தப்பாடல் இப்போதுவரை சுமார் 17 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.