நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகயிருக்கும் புதிய படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக இணைந்துள்ளார்.
ஒளிப்பதிவாளரான நட்டி நடராஜ் ‘சதுரங்க வேட்டை’, ‘போங்கு’ உள்ளிட்ட படங்கள் மூலம் நடிகராகவும் முன்னேறி வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படத்திலும் நட்டி மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார்.

நட்டி நடராஜ் நடிப்பில் புதிய திரில்லர் படம் உருவாக உள்ளது. அந்தப் படத்தை ஹாரூன் என்பவர் இயக்குகிறார். பிளாக் ஷீப் நந்தினி, சாஸ்திரி பாலா ப்ரீத்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘பிசாசு 2’ படத்தின் மூலமாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ள கார்த்திக் ராஜா இந்தப் படத்திற்கும் இசையமைக்க உள்ளார். சில தினங்களுக்கு முன்பு அந்தப் படம் பூஜையுடன் துவங்கப்பட்டது.

தற்போது நடிகை ஷில்பா மஞ்சுநாத் அந்தப் படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘காளி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் நட்டிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.