V4UMEDIA
HomeNewsKollywoodயார் அந்த மாஸ்க்மேன் ? கீர்த்தி சுரேஷிடம் தாமதமாக தான் சொன்னோம் ! சஸ்பென்ஸ் வைக்கும்...

யார் அந்த மாஸ்க்மேன் ? கீர்த்தி சுரேஷிடம் தாமதமாக தான் சொன்னோம் ! சஸ்பென்ஸ் வைக்கும் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்

ரில்லர் படங்கள் என்றாலே எப்போதும் தனி மவுசு தான். ஏனென்றால் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நம்மை உன்னிப்பாக கவனிக்க வைத்துக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்குயின்’. தலைப்பிலேயே வார்த்தை விளையாட்டை உருவாக்கியுள்ள இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் எந்தவொரு இயக்குநரிடமும் பணிபுரியவில்லை, எந்தவொரு குறும்படமும் இயக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் வெளியான டீஸரின் மூலமே தன்னை இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டார். இணையத்தில் பலரும் யார் அந்த மாஸ்க் மேனாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு தமிழில் இந்தப் படத்தில் தான் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கொடைக்கானல் படப்பிடிப்பு அனுபவங்கள், விஜய் சேதுபதியின் உதவி என இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் பகிர்ந்த விஷயங்கள் இதோ:

18 நாளில் ‘பெண்குயின்’ கதை:


ஒரு படம் எப்போது தொடக்கம் என்பது தெரியாமலேயே 6 மாதம் போய்விட்டது. உடனே தான் ‘பெண்குயின்’ கதையை 18 நாட்களில் எழுதிமுடித்தேன். நாயகியை மையப்படுத்தி ஒரு கதை எழுதலாம் என்ற எண்ணோட்டத்தில் தான் எழுதினேன். சாதாரண ஒரு பெண், அசாதாரண சூழலில் மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் ‘பெண்குயின்’. இந்தக் கதையை தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னவுடன், கீர்த்தி சுரேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர் நடிக்கவில்லை என்றால், வேறு இருவரை அணுகலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், கீர்த்தி சுரேஷிற்க்கு கதையைக் கேட்டவுடனே பிடித்துவிட்டது. குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அப்படி கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிக்கவில்லை என்பதால் அவருக்கு புதுமையாக இருக்கும் என தோன்றியது. அந்தக் கதாபாத்திரத்தில் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார்

20 நிமிடத்துக்கு ஒரு சஸ்பென்ஸ்

இதுவொரு த்ரில்லர் கதை என்பதால், 20 நிமிடத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் என்று நிறைய கதையில் ஒளித்து வைத்துள்ளேன். ஆகையால் இது தான் கதை என்று என்னால் இப்பொது சொல்ல முடியாது. ஒரு லைனில் சொன்னேன் என்றாலே இது தான் கதை என்று யூகித்துவிட முடியும். ஒரு அம்மா தனது பையன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை இந்தப் படத்தில் காணலாம். அந்த மகனைக் காப்பாற்ற ஒரு அம்மா எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை தான் காணவுள்ளீர்கள்.

தேனீக்கள் கடி

கொடைக்கானலில் காட்டில் படப்பிடிப்பு செய்துக் கொண்டிருக்கும் போது லைட்டின் வெளிச்சத்தால் தேன்கூடு ஒன்று கலைந்துவிட்டது. கீர்த்தி சுரேஷ் தொடங்கி ஒட்டுமொத்த படக்குழுவினரையும் கடித்துவிட்டது. அதில் 4 பேருக்கு அதிகமாக கடித்து, மயக்கம் போட்டுவிட்டார்கள். ஷுட்டிங்கை பாதியிலேயே நிறுத்தி, மயக்கம் போட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தோம். மருத்துவர்கள் வந்து ஒட்டுமொத்த படக்குழுவினரையும் செக் பண்ணி அரை நாள் கழித்து தான் அடுத்து ஷுட்டிங் போனோம்.

மலைப்பகுதியில் படப்பிடிப்பு என்பதால், தொடர்ச்சியாக 5 மணி நேரம் வரை தான் படப்பிடிப்பு செய்யவே முடியும். திடீரென்று மேகங்கள் மூடிவிடும் அல்லது மழை வந்துவிடும். அதற்கு இடையே தான் ஷுட்டிங்கே செய்தோம். நீங்கள் பார்க்கவுள்ள காட்சிகள் எல்லாமே அந்தக் கஷ்டத்துக்கு இடையே படமாக்கியது தான். ஒட்டுமொத்தம் 36 நாட்கள் படப்பிடிப்புச் செய்துள்ளோம்.


படக்குழுவினருக்கே தெரியாத மாஸ்க்மேன்

டீஸரின் இறுதியில் நீங்கள் பார்க்கும் மாஸ்க் மேன் ஷுட்டிங் முடியும்வரை யாருக்குமே தெரியாது. அவர் யார் என்பதை படமாக்கும் போது கூட ரொம்பவே குறைவான ஆட்களை வைத்துத் தான் படமாக்கினோம். இப்போது கூட படப்பிடிப்பு குழுவில் 20% பேருக்கு மட்டுமே அது யார் என்று தெரியும். கீர்த்தி சுரேஷிற்க்கும் ரொம்ப தாமதமாகத் தான் சொன்னோம்.


Image


‘பெண்குயின்’ தலைப்பு ஏன்?

‘பெண்குயின்’ என்ற தலைப்பு ஏன் என்றால், பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணித்தில் தான். அம்மா என்பவரை படத்தில் ஸ்பெஷலாக காட்டுகிறேன். வார்த்தை விளையாட்டு மாதிரி தான் தலைப்பை முடிவு செய்தேன். பெண்கள் எப்போதுமே குயின் தான். யாருமே சளைத்தவர்கள் அல்ல. இது ஒரு ஆணாதிக்க சமூகமாகவே பார்க்கிறேன். அதற்கு இடையில் பெண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, உழைத்து முன்னேறுகிறார்கள். ஆகையால் ‘பெண்குயின்’ என்று தலைப்பு வைத்தால் ஆண்ராஜாவுக்கு சமமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வைத்தேன். இந்த தலைப்புக்கு ஒரு பவர் இருக்கும் என்பதால் தான்.

தொழில்நுட்பக் குழுவினரின் உதவி

த்ரில்லர் கதை என்பதால் நிறைய பின்னணி இசைக் கொண்ட காட்சிகள் இருக்கிறது. அதனால் இசையமைப்பாளர் சரியானவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து சந்தோஷ் நாராயணனை முடிவு செய்தோம். நாங்கள் எடுத்தக் காட்சிகளை எல்லாம் பின்னணி இசையின் மூலம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்.

கார்த்திக் பழனி தான் ஒளிப்பதிவாளர். இதர மொழிகளில் படம் செய்திருந்தாலும், தமிழில் இது தான் அவருக்கு முதல் படம். இந்தப் படத்தைப் பார்த்தீர்கள் என்றாலே, அவருடைய ஒளிப்பதிவு எப்படி என்று தெரிந்துக் கொள்வீர்கள். தமிழ்த் திரையுலகிற்கு நல்லதொரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டார் என்று சொல்வீர்கள்.
அனில் கிருஷ் தான் எடிட்டர். எங்களுடைய காட்சிகளை எல்லாம் சரியாக எடிட் செய்து, த்ரில்லர் படத்துக்கு தேவையானதைக் கொண்டு வந்துவிட்டார். சக்தி வெங்கட்ராஜ் தான் கலை இயக்குநர். படத்தில் எது செட் என்று உங்களால் யூகிக்கவே முடியாது. அப்படியொரு பணி. பல்லவி சிங் தான் ஆடை வடிவமைப்பாளர். கொடைக்கானல் பின்னணிக் கொண்ட படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு ஆடைகளை ஒவ்வொருவருக்கும் தனியாக டிசைன் செய்தார். டீஸரில் வரும் சார்லி சாப்ளினுக்கான உடை எல்லாம் ஸ்பெஷலாக வடிவமைத்தது. இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் தவிர்த்து மீதி அனைவருமே என்னுடைய நண்பர்கள். ஆகையால், நண்பர்களோடு இணைந்து ஒரு நல்ல த்ரில்லர் படம் பண்ணியிருக்கேன்.

ஓடிடியில் வெளியீடு

தியேட்டரிலேயே படம் பார்த்து வளர்ந்தவன் தான். வெப் சீரிஸ் எல்லாம் கடைசி 3 வருடங்களில் பிரபலமானவை தான். தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், இந்த கொரோனா அச்சுறுத்தலால் அமேசானில் வெளியாகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் அனைவரும் மீண்டும் பழைய மாதிரி வருவார்களா என்று தெரியவில்லை. அமேசானில் படம் 200 நாடுகளில் வெளியாகிறது எனும்போது பெரிய விஷயம். நிறையப் பேர் ஓடிடியில் இந்தப் படம் பார்த்தேன். அருமை என்று பலரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு மேஜிக். அதை நான் மறுக்கவில்லை. இப்போதுள்ள சூழல் அப்படியிருக்கிறது. ஓடிடியில் பாஸ் செய்து, பாஸ் செய்து பார்ப்பார்கள். அப்படி பாஸ் பண்ணிப் பார்க்காத அளவுக்கு என் படம் நிற்கவேண்டும். அதில் மட்டும் வெற்றியடைய வேண்டும். 


விஜய் சேதுபதியின் உதவி
நாடகப் பின்னணியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். அதிலுள்ள அனுபவங்களால் தான் திரையுலகில் படம் இயக்கியிருக்கிறேன். எனது நலம் விரும்பி விஜய் சேதுபதி. அவர் தான் இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார். கார்த்திகேயன் சந்தானம் சார் கதையைக் கேட்டுவிட்டு, உடனே தயாரிக்க ஒப்புக் கொண்டார். ஆகையால் விஜய் சேதுபதி, கார்த்திகேயன் சந்தானம் இருவருமே எனது திரையுலக வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியமானவர்கள். எந்தவொரு அனுபவம் இல்லாமல் வருபவனை நம்புவதற்கு ஒரு தைரியம் வேண்டும். நான் எப்படி இயக்குவேன், எப்படி ஷாட் வைப்பேன் என்று எதுவுமே தெரியாமல் இந்த வாய்ப்பை என்னையும், கதையையும் நம்பிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு மிகவும் நன்றி!

Most Popular

Recent Comments