நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்தி படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்து இந்தியில் 2013ல் வெளியான படம் ராஞ்சனா. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. இத்திரைப்படம் தான் நடிகர் தனுஷின் முதல் இந்தி திரைப்படமாகும். இந்த படத்தை ஆனந்த எல் ராய் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். தற்போது இதே கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகிவுள்ளது.
‘அத்ரங்கி ரே’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் முன்னணி நடிகர்களாக நடிக்க ஆனந்த எல் ராய் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சாரா அலி கான் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து படப்பிடிப்பு பணிகள் மெல்ல தொடங்கி வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் தனுஷ் தமிழகத்தை சேர்ந்த இளைஞனாகவே நடித்துள்ளார். இதில் சில காட்சிகளை மதுரையில் படம்பிடிக்க உள்ளார்கள். இதனால் அக்டோபரில் பாலிவுட் குழுவினர் மதுரையில் படப்பிடிப்புகளை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.