V4UMEDIA
HomeNewsKollywood25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ படம் மூலம் தமிழுக்கு திரும்பிவரும் சுதாராணி

25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ படம் மூலம் தமிழுக்கு திரும்பிவரும் சுதாராணி

சமீபத்தில் கோசுலோ என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே என இந்தப்படத்தை தமிழில் வெளியிடும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனத்தை சேர்ந்த ஜெனீஷிடம் தொடர்பு கொண்டபோது, படத்தை பற்றி அவர் சொன்ன தகவல்கள் அனைத்துமே வித்தியாசமாகத்தான் இருந்தது.

“தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகியுள்ளது இந்தப்படம்.. கதையின் தன்மை கருதி தமிழ் பதிப்புக்கு கோசுலோ என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இதில் சுதாராணி பல வருடங்களுக்கு முன் தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கன்னட திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவரும் சமூக ஆர்வலருமான சுரேஷ் ஹெப்லிகர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 






இதுவரை வெளியான மும்மொழி படங்கள் எல்லாமே ஒரே கதை, ஒரே நடிகர் பட்டாளம் என்ற வகையிலோ, அல்லது ஒரே கதை, அந்தந்த மொழிக்கு ஏற்ற நடிகர்கள் என்கிற வகையிலோ தான் வெளியாகி இருக்கின்றன.. இன்னும் சொல்லப்போனால் கதை முழுவதும் ஒரே மாதிரி இருந்தால் கூட, மொழிக்கு ஏற்றபடி க்ளைமாக்ஸ் மட்டும் மாற்றப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

ஆனால் இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய முயற்சியாக மூன்று மொழிகளுக்கும் ஒப்பனிங், க்ளைமாக்ஸ் ஆகியவை மட்டும் ஒரே மாதிரியாகவும் உள்ளே நடக்கும் கதை வேறு மாதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்தப்படத்தின் ஹைலைட்டான அம்சம். 







இந்தப்படம் சைகாலஜிகல் த்ரில்லர் ஆக உருவாகியுள்ளது.. ஒரு மலை பிரதேசத்திற்கு ஒரு வயதான தம்பதி, ஒரு நடுத்தர வயது ஜோடி மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் வருகின்றனர்.. அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை அவர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை..

படத்தை பார்க்கும்போது எதற்காக கோசுலோ என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்.. அதற்கு முன்னதாக இந்தப்படத்திற்கு கோசுலோ என ஏன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை யூகித்து அதற்கான சரியான காரணத்தை எங்களுக்கு எழுதி அனுப்பும் 25 நபர்களுக்கு அவர்களுடையே வீடு தேடி பரிசுவரும் புதிய போட்டி ஒன்றையும் நடத்த உள்ளோம்” என கூறுகிறார் ஜெனீஷ்

நல்ல படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் அடுத்ததாக யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘கிருஷ்ணா அர்ஜூனா யூகம்’, பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்திருக்கும் ஞானச்செருக்கு உள்ளிட்ட சில தரமான படங்களை அடுத்தடுத்து வெளியிட இருக்கின்றனர்.

Most Popular

Recent Comments