கூலி படத்தின் படப்பிடிப்புத் தள புகைப்படங்களை பகிர்ந்து லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த சன் பிக்சர்ஸ்!


எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஐந்தாவது முறையாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவ்ர்களின் 171-வது படமான ‘கூலி’ திரைப்படத்தை, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து, படத் தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பின்னர் கூலி திரைப்படம் விரைவில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் அனிருத்தும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்துடன் ஐந்தாவது முறையாக இணைகிறார். இத்திரைப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, ஷ்ருதி ஹாசன், சௌபின் ஷகிர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று அவரது 38-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி சன்பிக்சர்ஸ் நிறுவனம் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மேலே குறிப்பிடப்பட்ட நட்சத்திரங்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்தியது. அதேபோல திரைத்துறையை சார்ந்த பல்வேறு பிரபலங்களும் அவரை வாழ்த்தினர்.
முன்னதாக காலையிலேயே சன்பிக்சர்ஸ் தமது அதிகாரப் பூர்வ சமூகவலைத்தள பக்கங்களில் பிறந்தநாள் வாழ்த்து காணொளியை வெளியிட்டு வாழ்த்தினார்கள்.