Home Gallery Events மூக்குத்தி அம்மன்-2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

மூக்குத்தி அம்மன்-2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட பூஜையுடன் துவங்கியது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க RJ பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் மூக்குத்தி அம்மன் OTT-இல் வெளியாகி ஹிட் ஆனது.அதன் தொடர்ச்சியாக மூக்குத்தி அம்மன்-2-ஆம் பாகம் திரைப்படத்தின் பூஜை விழா மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட பூஜையுடன் துவங்கியது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாராவே, இந்த பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் பூஜைக்காக ஸ்டுடியோவில் கோவில் போல செட் போடப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு, பெரிய அளவில் பூஜை விழா நடைபெற்றது. மூக்குத்தி அம்மன்-2 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மேடையில் பேசியபோது,”இப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததற்கு காரணமாக இருந்தது நயன்தாராதான். முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, நயன்தாரா விரதம் இருந்தார். அதே போல இரண்டாம் பாகம் பூஜை போடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக தன்னுடைய குழந்தைகளுடன் விரதத்தை தொடங்கி விட்டார்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,”RJ பாலாஜி முதன் முதலில் படத்தின் பெயர் மூக்குத்தி அம்மன் என்று சொன்னதும், எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஏனென்றால் மூக்குத்தி அம்மன், என்னுடைய குலதெய்வம் அதனால் அந்த பெயரிலேயே படம் எடுக்க நான் ஒத்துக்கொண்டேன், அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதன் பிறகு அம்மன் சம்பந்தமான எந்த ஒரு படத்தையும் நான் பார்க்கவே இல்லை. இதனால் நாமே ஒரு அம்மன் படத்தை எடுக்கலாம் என்ற யோசனை வந்த போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகமாக எடுக்கலாம் என்று யோசித்தேன்.மேலும், ஃபாண்டஸி படம் என்றாலே அது சுந்தர்.சி தான் என்று அனைவருக்கும் தெரியும். இதனால் இந்த படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்துவிட்டேன். அவர் உருவாக்கிய கதையை என்னிடம் சொன்னதும் எனக்கு அந்த கதை மிகவும் பிடித்து விட்டது.

இறுதியில் குஷ்பூ, மீனா, ரெஜினா காஸாண்ட்ரா, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி மற்றும் பிற நடிகர்,நடிகைளுடன் படக்குழுவும் மேடையில் இருந்தபோது குஷ்பூவும், மீனாவும் இணைந்து திரிசூலத்தை நயன்தாரா கையில் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.