‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ஆக்ஷன் காட்சிகளுடன் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘ஜெயிலர்’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10, 2025 -அன்று தொடங்கியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கி 2023 -ல் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பின் காரணமாக ‘ஜெயிலர்-2’ திரைப்படம், இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று இந்தியா முழுவதும் குறிப்பிட்ட திரையரங்குகளில் டீசர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் மூலம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். முதல் படத்தைப் போலவே, ஜெயிலர்-2-ஆம் பாகமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது.


இதற்காக இயக்குனர் நெல்சனுக்கு முன்கூட்டியே மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது, மேலும் ஜெயிலர்-2-ஆம் பாகத்தின் ஆக்ஷன் காட்சிகளை சர்வதேச தரத்திற்கு வடிவமைப்பது குறித்து படத்தின் அறிவிப்பு டீசரில் அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

‘ஜெயிலர்-2’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய மேலதிக தகவல்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பின்னர் அறிவிக்கப்படும்.