சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரைக்கலைஞர்கள் புகழாரம்!
வி4 என்டர்டெயினர்ஸ்(V4 Entertainers) மற்றும் சினிமா ஃபேக்டரி(Cinema Factory) இணைந்து திரைப்பட இயக்குநர் பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு விழாவை கடந்த திங்கட்கிழமை(11-11-2024)-அன்று நடத்தினார்கள். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க பங்களிப்புடன் இனிதே நடைபெற்றது.

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பேரனும், ‘இளைய திலகம்’ பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு இயக்குநர் பீம்சிங் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் நூற்றாண்டு விழாவில் திரைக்கலைஞர்கள் பங்கேற்று அவருக்கு புகழாரம் சூட்டினர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பங்களிப்புடன் தேனாம்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது. நடிகர் சிவக்குமார் தலைமை தாங்க,இயக்குநர் கே.பாக்யராஜ் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.உதயகுமார், பொதுச்செயலாளர் ம.பேரரசு, திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேவதாஸ், அபிராமி.ராமநாதன், இயக்குநர்கள் வி.சி.குகுநாதன், எஸ்.பி.முத்துராமன், ‘காரைக்குடி’ நாராயணன், சித்ரா லட்சுமணன், ‘டப்பிங் கலைஞர்கள்’ சங்கத்தின் தலைவர் ‘டத்தோ’ ராதாரவி, மக்கள் தொடர்பாளர் சங்கத் தலைவர் விஜயமுரளி, சினிமா பத்திரிக்கையாளர் சங்க தலைவர் பாலேஷ்வர், இந்தோ-ரஷ்யன் கலாச்சார மைய மேலாளர் தங்கப்பன் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.

விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில்,” ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நான் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். எனக்கு பிடித்த இயக்குநர்களில் பீம்சிங்கும் ஒருவர். ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனை சரியாக பயன்படுத்தியவர். பல்வேறு நூறுநாள் விழாக்களை கொண்டாடியுள்ள அவரது படங்களில் இருந்து, அவர் கையாண்ட படத்தொகுப்பு முறைகளை புதிய இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சினிமாவில் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நஷ்டம் வராது என்று தெரிவித்தார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் கூறுகையில், “நான் பீம்சிங்கை பார்த்ததே இல்லை. ஆனால் அவரது சினிமாக்கள் மூலமாக என் மனதில் அவர் ஆழமாக பதிந்துள்ளார். சினிமாவை ரசித்து நேசித்தவர். சினிமாவில் சிறந்த மனிதன் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் பெருந்தன்மையான குணம் கொண்டவர் பீம்சிங்”, என்றார்.
நடிகர் சிவக்குமார் பேசுகையில்,”பீம்சிங் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு சாட்சி அவரது குடும்பம். நான் எதிர்பார்க்கவில்லை. பீம்சிங்குக்கு இவ்வளவு சீடர்கள் இருப்பார்கள் என்று. ‘பாசமலர்’ படம் பார்த்து அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் ‘பாதபூஜை’ படத்தில் பயணித்தேன். பொறுமையான மனிதர். இவரைப் போன்ற சிரஞ்சீவியான ஆட்கள் நாம் போனாலும் இன்னும் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்கள்”, என்று பேசினார்.
முத்தாய்ப்பாக திரு.பீம்சிங் அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்த் திரையுலக ‘மார்க்கண்டேயன்’ திரு.சிவக்குமார் அவர்கள் சினிமா ஃபேக்டரி மற்றும் வி4 என்டர்டெயினர்ஸ் சார்பாக நினைவு பரிசை வழங்கினார்.


இயக்குநர்கள் சி.ரங்கநாதன், சண்முகசுந்தரம், நம்பிராஜன், சுப்பிரமணிய பாரதி, படத்தொகுப்பாளர் அசோக் மேத்தா, பத்திரிக்கை மக்கள் தொடர்பாளர் ஜி.பாலன், பீம்சிங்கின் குடும்பத்தினர் திரு.பீ.லெனின், திரு.பீ.இருதயநாத், திரு.பீ.கண்ணன், மகள் ஜனனி, திரு.பீ.திலீப்குமார், திரு.கோபி பீம்சிங், டாக்டர் பீ.சுரேஷ் மற்றும் சினிமா ஃபேக்டரி நிறுவனர் ராஜேஷ், வி4 என்டர்டெயினர்ஸ் சார்பாக ‘டைமண்ட்’ பாபு, ரியாஸ் கே அஹ்மத், சூர்யா மௌனம் ரவி ஆகியோர் பங்கேற்றனர். திரு.பீம்சிங் அவர்களை வாழ்த்தி பேசிய திரு.கலைஞானம் மற்றும் திரு.ஏவிஎம்.குமரன் அவர்களின் காணொலி காட்சி ஆவணப்படத்துடன்
ஒளிபரப்பப்பட்டது.















