கோபுரம் பிலிம்ஸ் ஜி.என் அன்புச் செழியன் தயாரிப்பில், ‘ரங்கூன்’ மற்றும் சமீபத்தில் மாபெரும் வெற்றியடைந்த ‘அமரன்’ திரைப்படங்களின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் அவர்கள் நடிப்பில் 55-ஆவது திரைப்படத்தின் பூஜை நேற்று (08-11-2024) நடைபெற்றது.
தனது திறமையான நடிப்பின் மூலம் ஏகோபித்த ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ள நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது மற்ற அனைத்து நடிகர்களை விடவும் நடிப்பிலும் இயக்கத்திலும் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார். இந்த 2024-ஆம் ஆண்டு அவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகின. இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 49-ஆவது திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 50-ஆவது திரைப்படமான ‘ராயன்’ திரைப்படம் ஜுலை 26-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியடைந்ததுடன், அவரது திரை வாழ்வில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இப்படம் தயாரிப்பில் இருக்கும் போதே அவரது இயக்கத்தில் 3-ஆவது திரைப்படத்தை துவக்கி, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பை வெளியிட்டார்.
அதன் பிறகு அவரது நடிப்பில் 51-ஆவது திரைப்படமாக ‘குபேரா’ திரைப்படத்தை, கடந்த பொங்கலை ஒட்டி படப்பிடிப்பை துவக்கி மார்ச் 8-ஆம் தேதி தலைப்பினை அறிவித்தனர். அதன் டீசரை வரும் நவம்பர் 15-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
இதற்குப் பிறகு அவரது இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாகவும், நடிப்பில் 52-ஆவது திரைப்படமாகவும் இட்லி கடை திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே இந்தியில் தேரே இஷ்க் மே மற்றும் 54-வது திரைப்படமாக கடந்த ஜூன் மாதம் கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா சுயசரிதையில் அவரது இசை மற்றும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘இளையராஜா’ படத்திற்கு பூஜை மற்றும் துவக்க விழா கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. விழாவில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
தற்போது அவரது 55-ஆவது திரைப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா நேற்று (08-11-2024) சிறப்பாக நடைபெற்று உள்ளது. இதில் தனுஷ், தயாரிப்பாளர்கள் ஜிஎன் அன்புசெழியன், சுஷ்மிதா அன்புசெழியன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.