சூறாவளி போல சுழன்று உழைத்துக் கொண்டிருக்கும் நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ். சமீபத்திய வெற்றியான ராயனை தொடர்ந்து 51-ஆவது படமாக ‘குபேரா’ மற்றும் 52-வது படமாக ‘இட்லி கடை’ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே இயக்குனராக இரண்டாவது படமாக ‘ராயன்’, மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, தற்போது நான்காவது திரைப்படமாக ‘இட்லி கடை’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் ‘ராயன்’ மற்றும் ‘இட்லி கடை’ திரைப்படங்களில் தானே கதாநாயகன் பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

‘இட்லி கடை’ திரைப்படத்தை தனது சொந்த திரைப்பட நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கும் அவரது ஆஸ்தான இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் ‘அருண் விஜய்’ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி வெளியாவதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
படத்தைப் பற்றி மேலதிக விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெகு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.