V4UMEDIA
HomeNewsKollywood'தங்கலான்' திரைப்படத்தின் மிரட்டலான முன்னோட்டம் வெளியானது!

‘தங்கலான்’ திரைப்படத்தின் மிரட்டலான முன்னோட்டம் வெளியானது!

சமூகம் சார்ந்த அவலங்களை மையப்படுத்திய திரைப்படங்களை எடுத்து வரும் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘தங்கலானி’ன் மொத்த முன்னோட்டமும் நிலம், அப்பகுதி மக்களின் உடை, தோற்றம், மொழி, கலை ஆக்கம் என பிரம்மாண்ட படைப்பாக படம் உருவாகியுள்ளதை உணர்த்துகிறது. அதிலும் விக்ரமின் நடிப்பு அசரடிக்கிறது. அதேபோல பார்வதியின் தோற்றமும், மாளவிகா மோகனின் மிரட்டலான நடிப்பும் கதாபாத்திரங்கள் அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளதை உணர்த்துகின்றன.

கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. “சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை” என விக்ரம் பேசும் வசனமும், தொடர்ந்து வரும் சண்டைக் காட்சிகளும் கவனம் பெறுகிறது. முன்னோட்டத்தின் இறுதியில் வரும் பாடல் ரசிகர்களை கவரும் என தெரிகிறது. மொத்தத்தில் அனைத்து காட்சி அமைப்புகளும் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடைசியாக ஜூன் 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை.

இதோ தங்கலானின் முன்னோட்ட காணொளி:

Most Popular

Recent Comments