இயக்குனர்,நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட K.S.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகியுள்ளது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். இந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’ மற்றும் ‘கூகுள் குட்டப்பா’ ஆகியவை வெளியாகியுள்ளன.

குடும்பப்பாங்கான, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதற்கு பெயர்போன இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர்கள் சூர்யகதிர், K.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் K.S.ரவிக்குமார், கௌதம் மேனன், சமுத்திரக்கனி,ஸ்மிரிதி வெங்கட்,ஐஸ்வர்யா தத்தா,அபி நக்ஷத்ரா,அபிநயா,சித்தாரா, முனீஸ்காந்த்,ரெடின் கிங்ஸ்லி,’கே.ஜி.எஃப்’ புகழ் ‘கருடா’ராமச்சந்திரா,’மைம்’கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு C.சத்யா இசையமைக்க, ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஜான் ஆபிரகாம் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண் சங்கர் துரை கவனிக்கிறார்.சண்டைப் பயிற்சியாளர்களாக விக்கி மற்றும் ஃபீனிக்ஸ் பிரபு கவனிக்க, பாரதிராஜா தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான K.S.ரவிக்குமார் அவர்கள்,விக்ரமன் அவர்கள்,கதாநாயகன் விஜய் கனிஷ்கா அவர்கள் மற்றும் படக்குழுவினர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்,’உலக நாயகன்’ கமலஹாசன், ’கோட்(G.O.A.T) நாயகன் ’தளபதி’ விஜய் மற்றும் ‘கங்குவா’ நாயகன் சூர்யா ஆகியோரைச் சந்தித்தனர். ரவிக்குமார் அவர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களை வைத்து மூன்று படங்களையும், ‘உலக நாயகன்’ கமல்ஹாசனை வைத்து மூன்று படங்களையும், ‘தளபதி’விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை வைத்து தலா ஒரு படம் இயக்கி உள்ளார்.

அதே போல இயக்குனர் விக்ரமன் அவர்களும் ‘தளபதி’விஜய்யை வைத்து ‘பூவே உனக்காக’,சூர்யாவை வைத்து ‘உன்னை நினைத்து’ போன்ற மாபெரும் வெற்றித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.அந்த அன்பின் அடிப்படையில் ‘ஹிட்லிஸ்ட்’திரைப்படத்தின் திரைமுன்னோட்டத்தை காண்பித்தனர்.அதைப் பார்த்து ரசித்த நால்வரும் படம் சிறப்பாக தயாராகி உள்ளதாகவும் கதாநாயகன் விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளதாகவும் பாராட்டி படக்குழுவையும் வாழ்த்தினர்.

இந்நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ திரைமுன்னோட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை வெளியிடுகிறார்.

‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.