
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் பொதுத் தேர்தல் நாடெங்கும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட்ட 88 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் இன்று பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையை சார்ந்த பிரபலங்களும், மற்ற துரைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

கேரளாவில் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களும் தங்களது வாக்கை செலுத்தினர்.அதே போல இஸ்ரோ தலைவரான சோம்நாத் அவர்களும் தனது ஜனநாயக கடமையை கேரளத்தில் ஆற்றினார்.


கர்நாடகாவிலும் திரைத்துறை சேர்ந்த முன்னணி கலைஞர்களான சிவராஜ்குமார், கிச்சா சுதீப் மற்றும் யாஷ் போன்ற முன்னணி கலைஞர்களும் வாக்களித்தனர். கடந்த சில ஆண்டுகளாக தனது அரசியல் கருத்துகளை முன்வைத்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள், தானும் வாக்களித்து விட்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


அதே போல முன்னாள் பிரதமர் தேவ கௌடா அவர்களும் தள்ளாத வயதிலும் தனது வாக்கைச் செலுத்தினார்.முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் திராவிட் மற்றும் அனில் கும்ப்ளே தங்களது ஜனநாயக கடமை ஆற்றினர்.