மலையாள சினிமாவில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்து ‘பறவ’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறிய சௌபின் ஷஹிர்,அவருடைய சகோதரர் பாபு ஷகீர் மற்றும் ஷான் ஆண்டனி மூவரின் தயாரிப்பில், ஜானே மான் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று நிரூபித்த சிதம்பரம்.S.பொடுவல் இயக்கத்தில், இன்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துக் கொண்டு இருக்கும் மலையாளத் திரைப்படம் தான் ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’.

இத்திரைப்படத்தில் சௌபின் ஷஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ்,கணபதி,ஜீன் பால்,தீபக் பரம்போல் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். இது மஞ்ஞுமல் என்ற ஊரின் நண்பர்கள் குழு, தங்கள் விடுமுறையைக் கழிக்க கொடைக்கானல் செல்லும்போது, அவர்களில் ஒருவர் குணா குகையின் ஆழமான பள்ளத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அவர்களின் விடுமுறை எதிர்பாராத திருப்பமாக மாறி விடுகிறது. அவரை மீட்க நடந்த விறுவிறுப்பான முயற்சிகளே படத்தின் மீதிக் கதையாகும்.

இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி வெளியானது. சுமார் 20 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள் 175 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி உள்ளது. இதற்கு முன்பு கடந்த வருடம் வெளியான ‘2018’ திரைப்படமே மலையாள திரையுலகின் அதிக வசூல் செய்த படமாக இருந்து வந்தது. அச்சாதனையை இத்திரைப்படம் முறியடித்துள்ளது. மேலும் சௌபின் ஷஹிர் மற்றும் ஸ்ரீநாத் பாஸி இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் வெற்றி படமாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் இந்த படமும் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்துள்ளது.

இத்திரைப்படத்தில் மலையாளத் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான சுஷின் ஷியாம் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார. ஷைஜு காஃலித் ஒளிப்பதிவாளராகவும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். ஆடைவடிவமைப்பாளராக மஷர் ஹம்ஸா பணியாற்றியுள்ளார். விக்ரம் தாகியா சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

படம் கேரளம்,தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி உலகமெங்கும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.