விறுவிறுப்பாக தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் தனது 51-வது படத்தில் இடைவெளி இல்லாமல் நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து அவர் தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். தொடர்ந்து அவரது 51-வது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் தயாரிக்க, சோனாலி நரங் வழங்குகிறார். தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் ‘டாலர் ட்ரீம்ஸ்’ என்ற அறிமுகத் திரைப்படத்திலேயே தேசிய விருது வென்றவர் ஆவார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர்.
தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘பான் இந்திய’ திரைப்படமாக இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் மகா சிவராத்திரி மற்றும் பெண்கள் தினத்தன்று படத்தின் முதல் தோற்றத்தையும், தலைப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்க, சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் சண்டைக் காட்சிகளை மேற்பார்வையிடுகிறார்.
முதல் தோற்றத்தில் கிழிந்த சட்டை, அழுக்கடைந்த முகத்தில், அடர்ந்த மீசை மற்றும் தாடியுமாக பரிதாபத்துடன் ஏழ்மையான தோற்றத்தில் நின்றுகொண்டிருக்கிறார் தனுஷ். அவருக்கு பின்புறம் சிவன், பார்வதியின் படங்கள் உள்ளன. ‘குபேரா’ என தலைப்பிற்கு எதிர்மாறான தோற்றம் படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பான காணொளியையும் படக்குழு வெளியிட்டுள்ளது.அது பல லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.