இளைஞர்களால் அதிகம் கொண்டாடப் படும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் மூலம் வெள்ளித் திரையில் பிரதிபலிக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ், தானே இயக்கி நடிக்கும் அவரது 50-வது படத்தின் பெயர் மற்றும் முதல் தோற்றத்தை, படத்தின் தயாரிப்பு நிறுவனமும் தமிழ்த் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானதுமான சன் பிக்சர்ஸுடன் இணைந்து கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டார்.


இப்படத்திற்கு ‘ராயன்’ என பெயரிடப் பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தில் தனுஷுடன்,சந்தீப் கிஷன்,காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பிறகு 20-ஆம் தேதி முதல் ‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை உலகத்திலிருந்து ஒவ்வொரு கதாபாத்திரங்களாக தனுஷும் தயாரிப்பும் நிறுவனமும் இணைந்து வெளியிட்டு ரசிகர்களை எதிர்பார்ப்பிலேயே வைத்துள்ளனர்.


இதுவரை இயக்குனரும் நடிகருமான ‘நடிப்பு அரக்கன்’எஸ்.ஜே.சூர்யா, தனுஷின் அண்ணனும் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன்,பிரகாஷ்ராஜ்,துஷாரா விஜயன்,அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி,சரவணன் போன்ற முன்னணி கலைஞர்களின் தோற்றங்களும் கடந்த ஏழு நாட்களாக தினமும் மாலை 06:00 மணிக்கு வெளியாகியுள்ளது.


கதாபாத்திரத் தேர்வு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிர வைத்துள்ளது. நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்தவர், தனுஷ். இயக்குனராகவும் ‘ப.பாண்டி’திரைப்படத்தின் மூலம் முத்திரை பதித்தவர். ராயன் திரைப்படத்தின் மூலம் ஏதாவது மாயஜாலம் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

இப்படம் 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரவுள்ளது.
மேலதிக அதிகாரப் பூர்வத் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும்.