திரையுலகில் கடந்த காலங்களில் வெற்றிபெற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை நவீன உயர் தொழில்நுட்பத்திற்கு மெருகேற்றி வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அவ்வாறு வெளியிடப்படும் படங்கள் மக்களிடம் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் அவர்கள் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த வசந்த மாளிகை, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்கள் நடித்த பாபா, ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் அவர்கள் நடித்த வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றித் திரைப்படங்கள் சமீப காலங்களில் வெளியாகின.
அந்த வரிசையில் உலக நாயகனின் அட்டகாசமான நடிப்பில் கலைப்புலி.S.தாணு அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெற்றிப் பட இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் சங்கர் எஸான் லாய் அவர்களின் தரமான இசையில் புதிய தொழில்நுட்பங்களுடன் 2001-ம் ஆண்டு தீபாவளியை ஒட்டி ‘ஆளவந்தான்’ வெளியானது.
தயாரிப்பாளர் தாணு அவர்கள் இந்த வருடம் ஜனவரியில் நவீன உயர் தொழில் நுட்ப அம்சங்களுடன் மெருகூட்டப்பட்டு ‘ஆளவந்தான்’ 1000 திரையரங்குளில் வெளியாவதாக அறிவித்திருந்தார்.
இயக்குனர் திரு.சுரேஷ்கிருஷ்ணா அவர்கள் கூறுகையில் “
கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த எனது தமிழ்த் திரைப்படமான ‘ஆளவந்தான்’ விரைவில் 1000 திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது”என்றார்.
மேலும் அவர் கூறுகையில்”
‘ஆளவந்தான்’ நவம்பர் 16, 2001 அன்று வெளியானது.படம் வெளியாகி இன்றுடன்(16/11/2023) 22-வது ஆண்டு நிறைவடைகிறது. இப்படம் ஒரே நேரத்தில் இந்தியில் “அபய்” என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது”என்றார்.
மேலும் அவர் கூறுகையில் “இந்த திரைப்படம் ஒரு முன்னோடி முயற்சியாகும், இது உலகளாவிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் ஹாலிவுட், ஆஸ்திரேலிய ஸ்டுடியோக்களின் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உயர்தர படைப்பாக அமைந்தது. இந்திய சினிமாவில் முதன்முறையாக மோஷன் கன்ட்ரோல் கேமராக்களை இத்திரைப்படத்தில் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. புதிய கண்டுபிடிப்புகளை திரையுலகில் புகுத்தியதில் பல எல்லைகளை கடந்தது”என்றார்.
இந்நிலையில் நேற்று (17/11/23) ‘ஆளவந்தான்’ திரைப்படம் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி (08/12/2023 ) வெளியாவதாக கலைப்புலி S.தாணு அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.