தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று திரையுலகில் உள்ள சில பிரபலங்கள் போகிற போக்கில் கொளுத்தி போட அதை அவரது ரசிகர்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டு சோசியல் மீடியாவில் ரஜினி ரசிகர்களுடன் சண்டையிட்டு வந்தனர். இன்னும் ஒரு படி மேலே போய் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை சீரியஸ் ஆனது. இதை அடுத்து ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த சர்ச்சை குறித்து மறைமுகமாக ரஜினி பேசிய காக்கா, கழுகு ஒப்பீடு விஷயம் விஜய் ரசிகர்களிடம் இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது இதற்கு நிச்சயம் பதில் அளிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சில காரணங்களால் அந்த விழா நடைபெறாவிட்டாலும் தற்போது லியோ படத்தின் வெற்றி விழாவை நேற்று இரவு (நவ-1) நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர். இந்த விழாவிலும் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம், காக்கா – கழுகு ஒப்பீடு குறித்து விஜய் ஏதாவது பேசுவார் என பலரும் எதிர்பார்த்தது போலவே விஜய்யும் அந்த டாபிக்கை தொட்டார்.
அவரும் வழக்கம்போல ஒரு குட்டி கதை சொல்வதாக ஒரு காட்டில் யானை, முயல் என ஆரம்பித்து காக்கா, கழுகு என கூறியாதும் அதற்கு மேல் அவரை பேச விடாமல் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் தொடர்ந்து உற்சாக ஆரவாரம் செய்தனர். விஜய்யும் அந்த காக்க கழுகு என கூறியபோது சற்று நக்கலான சிரிப்பை வெளிப்படுத்தவே செய்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து பேசும்போது சூப்பர் ஸ்டார் என்றால் அது அவர் ஒருவர் தான் என்று கூறி இதுநாள் வரை தொடர்ந்து வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதே சமயம் இது பற்றி அவர் பேசும்போது, முதலில் புரட்சி கலைஞர் என்றால் அது கேப்டன் ஒருவர்தான்.. உலகநாயகன் என்றால் அது கமல்தான்.. சூப்பர் ஸ்டார் என்றால் அது அவர் ஒருவர் தான்.. அதேபோல தல என்றால்.. என்று கொஞ்சம் நிறுத்தி அதுவும் அவர் ஒருவர் தான்.. எனக்கு நீங்கள் கொடுத்த தளபதி பட்டமே போதும்” எனக் கூறினார்.