இயக்குனர் பா.ரஞ்சித் டைரக்ஷனில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த படம் தங்கலான். பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கேஜிஎப் தங்கச் சுரங்கம் பின்னணியில் சுதந்திர காலகட்டத்திற்கு முன்பு நடப்பதாக இந்த படத்தின் கதை பின்னணி அமைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது/
இந்த நிகழ்வில் நடிகர் விக்ரம் பேசும்போது, “வரலாற்றில் நடக்கும் நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது என்று என் தந்தை என்னிடம் சொல்லியிருந்தார். எல்லா நாட்டிலும் அவர்கள் வரலாற்றைக் கொண்டாடுகிறார்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவில் அது போல் நிறைய விசயங்கள் நடந்துள்ளது ஆனால் இப்போதைய தலைமுறைக்கு அது தெரியவில்லை. டைட்டானிக் காதல் கதை என்றாலும், அதன் பின்னணி, அந்த கதை நடக்கும் இடம் கப்பல், அதன் வரலாறு அது தான் முக்கியம், அது போல் நம் வரலாற்றில் நடந்த நிகழ்வை அந்த காலகட்டத்தை அவர்கள் வாழ்க்கையைச் சொல்கிற படம் இது,
இந்தப்படத்தைத் திரையில் கொண்டு வருவது அத்தனை கடினமாக இருந்தது. இந்தப்படம் செட்டுக்குள் எடுக்கவில்லை கேஜிஎஃப்பில் போய் அங்கு தங்கி எடுத்தோம், தேள் பாம்பு எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும். கல் முள்ளில் வெறும் காலில் நடந்து, அவர்கள் உடை போட்டுக்கொண்டு நடித்தேன்.
முதல் முறை லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன் அது இன்னும் கஷ்டம். டப்பிங்கில் நான் நிறைய மாற்றி விடுவேன், அந்நியனில் ரெமோ எல்லாம் டப்பிங்கில் மாற்றியது தான் ஆனால் இந்தப்படத்தில் அது நடக்காது. லைவ்வில் கச்சிதமாக அதே டோனில் பேச வேண்டும். கேமராவும் ஷாட் கட்டாகுது ஒரே ஷாட்டில் சுற்றி வரும், ரெஸ்ட்டே இருக்காது.
ஆனால் எத்தனை கஷ்டப்பட்டாலும் மறுநாள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் நான் இது மாதிரி உணர்ந்ததே இல்லை, ரஞ்சித்திற்கு நன்றி. ரஞ்சித் சார்பட்டா படத்தை விட 100 மடங்கு உழைத்திருக்கிறார் என்று கூறினார்