பொதுவாகவே சினிமாவில் பெண் இயக்குனர்கள் வருகை என்பது குறைவு தான். அப்படியே அவ்வப்போது யாரேனும் ஒரு பெண் இயக்குனர் வந்தாலும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்டு வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விடுகின்றனர். ஒரு சில பெண் இயக்குனர்கள் மட்டுமே சினிமாவில் சூட்சுமத்தை புரிந்து கொண்டு தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட ஒருவர்தான் இயக்குனர் சுதா கொங்கரா. துரோகி என்கிற படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக நுழைந்த இவர் அந்த படத்தில் தோல்வியை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களின் தொடர் வெற்றியால் முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கு உயர்ந்தார். தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார். அந்த வேலையும் தற்போது முடிந்து விட்டது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் சூர்யாவை வைத்து படம் இயக்கப் போகிறார் என்பது நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அது குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது சூர்யாவின் 43 வது படமாக உருவாகும் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் துல்கர் சல்மானும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் நடிக்கின்றனர். கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதுடன் அவரது நூறாவது படம் இது என்பது ஹைலைட்டான அம்சம். இந்த படம் கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஹிந்தி எதிர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் உருவாக இருப்பதாக இந்த படத்திற்காக புறநானூறு என சொல்லி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்கள் மூலம் தெரிகிறது.