விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அனைவரும் திருவிழா கொண்டாட்ட மனநிலைக்கு மாறி உள்ளனர். சினிமாவில் உள்ள பிரபலங்கள் கூட லியோ படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் நடைபெற்ற தன்னுடைய படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியபோது தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் லியோ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து இன்னும் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் விஜய்க்கும் யார் நம்பர் ஒன் என்கிற போட்டி இருப்பதாக தேவையில்லாமல் சோசியல் மீடியாவில் சிலர் திரி கொளுத்தி குளிர் காய்ந்து வந்தனர். விஜய் ரசிகர்கள் சிலர் கூட அதை உண்மை என்று நம்பினார்கள். ஆனால் மனம் திறந்து விஜயின் லியோ படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளதன் மூலம் இந்த விஷயத்தில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
கதாநாயகியாக திரிஷா நடிக்க முக்கிய வேடங்களில் அர்ஜுன், சஞ்சய் தத் கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.