இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றும் விதமாக பல வெற்றி படங்களை கொடுத்தவர். இன்றும் திரையுலகுக்கு வருகை தரும் பல இயக்குனர்களுக்கு மானசீக குருவாக விளங்குபவர். டைரக்ஷனில் இருந்து ஒதுங்கி விட்டாலும் சமீப வருடங்களாக பிசியான குணசித்திர நடிகராகவும் தனது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகிறார் பாரதிராஜா.
அதேசமயம் அவருடைய மகன் மனோஜ் பாரதி தந்தை வழியிலேயே இயக்குனராக விரும்பினாலும் கூட தந்தையின் விருப்பத்திற்காக தாஜ்மஹால் என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு அதில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
அடுத்து வந்த நாட்களில் ஒரு நல்ல குணச்சித்திர நடிகராகவும் மாறினார் மனோஜ் பாரதி. இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவான டைரக்ஷனில் களம் இறங்கி மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கி வருகிறார்
இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் மனோஜ் பாரதியை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.
ஷ்யாம் செல்வன் ரக்சனா அறிமுக ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய தினம் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.