தாமிரபரணி, பூஜை என இயக்குனர் ஹரியும் விஷாலும் கூட்டணி சேர்ந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகின. இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் இந்த இரண்டு படங்களும் ஒளிபரப்பாகும்போது இதற்கென ஒரு தனி ரசிகர் வட்டமே இருக்கின்றன. இந்த நிலையில் இவர்கள் இருவரும் மூன்றாவதாக இணைந்து ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க தயாராகி வருகின்றனர்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில், தான் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் மற்றும் புரமோஷன் உள்ளிட்ட வேலைகளில் விஷால் பிசியாக சுற்றி வந்தார்.
மார்க் ஆண்டனி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று அதற்கான சக்சஸ் மீட்டையும் நடத்தி அந்த சந்தோஷத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார் விஷால். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஹரி படத்திற்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி பக்கத்தில் உள்ள குமரசக்கனாபுரம் என்கிற பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 15 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அதைத் தொடர்ந்து இடைவெளியே இல்லாமல் அடுத்ததாக காரைக்குடி பகுதியில் தொடர்ந்து இன்னும் ஒரு 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம். தற்போது தூத்துக்குடியில் விஷால் மற்றும் நாயகி பிரியா பவானி சங்கர் ஆகியோருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.