மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள படம் லியோ. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். மற்றும் முக்கிய வேடங்களில் அர்ஜூன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நான் ரெடி என்கிற பாடல் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு பட்டிருந்தது. அதே சமயம் இந்த நிகழ்ச்சி நடைபெறுமா என்கிற ஒரு சந்தேகமும் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசை நிகழ்ச்சியை நடத்தவில்லை என படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அளவுக்கு அதிகமாக இந்த நிகழ்ச்சிக்கு பாஸ் கேட்டு நிறைய கோரிக்கைகள் வந்ததால் ரசிகர்களின் பாதுகாப்பை முன்னிட்டு லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதில்லை என முடிவு செய்திருக்கிறோம்..
அதேசமயம் ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க அடுத்தடுத்து படம் குறித்த அப்டேட்டுகளை தொடர்ந்து அவர்களுக்கு வழங்கி வருவோம். மேலும் எந்த ஒரு அரசியல் காரணத்திற்காகவும் வேறு மற்ற காரணங்களுக்காகவும் இந்த லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்துவதை நாங்கள் நிறுத்தவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்