கடந்த 2005ஆம் வருடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது 18 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி.வாசுவே இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். கதாநாயகியாக கங்கனா ரணவத் நடிக்க இணை கதாநாயகிகளாக மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது புகழ் கீரவாணி இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து தற்போது கேரளாவிற்கு சென்று இறங்கிய சந்திரமுகி 2 படக்குழுவினர் கொச்சியில் உள்ள லுலு மாலில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு கேரள ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர். தமிழகத்தை போல கேரளாவிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என பட குழுவினர் உற்சாகமாக இருக்கின்றனர்.