மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியானது. விஷால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.. எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரித்து வர்மா, அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகெங்கிலும் இப்போதுவரை 100 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுடன் வெற்றிச் சந்திப்பை மார்க் ஆண்டனி குழுவினர் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் படத்தின் வெற்றி குறித்து தங்களது உணர்வுகளை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது, “இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் இந்த கதையை சொன்னபிறகு மீண்டும் 20 நாட்கள் கழித்து நன்றாக டெவலப் வந்து இதை முழுமையாக கூறினார். அப்போதே அதில் எந்த அளவிற்கு அவர் ஈடுபட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. எதிர்காலத்தில் இன்னும் பிரமாதமான இயக்குநராக இவர் வருவார். இந்த படத்தில் என்னுடைய காட்சிகளை நடித்துக்காட்ட அவர் தயங்கினாலும், அவரை வற்புறுத்தி நடித்துக் காட்டச் சொன்னேன். அற்புதமாக நடித்துக் காட்டக் கூடியவர் ஆதிக். இந்த படத்தில் நான் பேசும் “என்னது ? பொம்பள சோக்கு கேக்குதா ?” உள்ளிட்ட மாடுலேஷன் வசனங்கள் எல்லாமே ஆதிக்கிடமிருந்து தான் நான் காப்பியடித்தேன். என்னுடைய அக்கா பிள்ளைகள் இந்த படத்தை பார்த்துவிட்டு, ஆதிக் உங்களுடைய ஜூனியர் வெர்ஷன் என்று சொன்னார்கள்” என்று கூறினார்..