மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த மலர் டீச்சர் ஆக சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. அதன்பிறகு தமிழ் திரையுலகத்திலும் அடி எடுத்து வைத்தாலும் அதற்கு முந்தைய மலையாள நடிகைகள் போல அல்லாமல் உடனடியாக தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்று விட்டார். அதற்கு ஏற்றார்போல தமிழ், மலையாளம் மொழிகளை விட தெலுங்கில் அவருக்கு அதிக வரவேற்பும் முக்கியத்துவமும் கிடைத்தது. சாய் பல்லவிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் வட்டமும் உருவானது.
இந்த மூன்று மொழிகளிலும் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தாலும் படங்களை மட்டும் செலெக்ட்டிவாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது புதிய தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய்பல்லவி. இந்த படத்தில் கதாநாயகனாக நாக சைதன்யா நடிக்கிறார்.
கடந்த 2021ல் வெளியான லவ் ஸ்டோரி என்கிற படத்தில் இவர்கள் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு வருட இடைவெளியில் இரண்டாவது முறையாக மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். கார்த்திகேயா 2 என்கிற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சந்து மொண்டேத்தி இந்த படத்தை இயக்குகிறார்.
அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார் என்கிற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.