தமிழ் திரை உலகில் ஒரு இசையமைப்பாளராக நுழைந்தவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த அவர் ஒரு கட்டத்தில் தனக்குள் இருந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடிகராகவும் மாறினார். அந்த வகையில் பல வெற்றி படங்கள் உள்ளிட்ட நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் திரைப்படம் வரும் அக்டோபர் ஆறாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான வேலைகளில் விஜய் ஆண்டனி ஈடுபட்டு இருந்த நிலையில் இன்று அதிகாலை அவரது மகள் மீரா அதிர்ச்சி தரும் விதமாக தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது விஜய் ஆண்டனியின் குடும்பத்தையே உலுக்கி போட்டுள்ளது.

ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது இரங்கல்களையும் அஞ்சலியையும் விஜய் ஆண்டனியின் மகளுக்கு செலுத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இப்போது வரை அறிவிக்கப்படவில்லை.
இன்னொரு பக்கம் இப்படி அவரது வீட்டில் நடந்த சோக நிகழ்வால் தாங்கள் நாளை நடத்த இருந்த திரையுலக நிகழ்ச்சிகளை சில பேர் வேறு தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் திருமணம் செய்த அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஆகியோரின் வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த துக்க நிகழ்வு காரணமாக ரத்து செய்யப்பட்டு வேறொரு நாளைக்கு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல விஜய் நடித்து வரும் லியோ படத்தின் போஸ்டர் வெளியிட்டு நிகழ்ச்சியையும் வேறொரு நாளைக்கு மாற்றி வைத்துள்ளதுடன் தங்களது இரங்கல்களையும் விஜய் ஆண்டனியின் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர்.















