V4UMEDIA
HomeNewsKollywoodதான் ஹீரோவாக்கிய நடிகர் பாபுவின் மறைவுக்கு பாரதிராஜா நேரில் அஞ்சலி

தான் ஹீரோவாக்கிய நடிகர் பாபுவின் மறைவுக்கு பாரதிராஜா நேரில் அஞ்சலி

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் மாறி தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்கள் பல பேர். அந்த வகையில் தான் 1990ல் பாரதிராஜா இயக்கிய என்னுயிர் தோழன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தவர்  நடிகர் பாபு.  அந்த படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆனால் அதன்பிறகு ஒன்றிரண்டு படங்களில் நடித்த நிலையில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் உயரமான கட்டிடத்தில் இருந்து டூப் போடாமல் குதிக்கும்போது  முதுகு தண்டுவடத்தில் அடிபட்டு மிகப்பெரிய அளவில் விபத்தை சந்தித்தார்.  அதன்பிறகு கடந்த 30 வருடங்களாக அவரால் எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகவே தனது வாழ்நாளை கழித்து வந்தார். இந்த நிலையில் அவர்  திடீரென எதிர்பாராத விதமாக  காலமானார்.

இவருக்கு திரை உலகைச் சேர்ந்த பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இவரை  தனது படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஜா  இவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் இதுகுறித்து சோசியல் மீடியாவில் ஒரு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, “திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவன்.. படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ‘என் உயிர் தோழன் பாபு’வின் மறைவு  மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments