சூது கவ்வும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன் தொடர்ந்து சின்னச்சின்ன படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும் படியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சில படங்களும் அவரது நடிப்பில் வெளியாக இருக்கின்றன. இன்னொரு பக்கம் தற்போது இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கும் வெப்சீரிஸ் பக்கமும் கவனத்தை திருப்பி உள்ளார் அசோக் செல்வன். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா தயாரிக்கும் கேங்ஸ் என்கிற வெப்சீரிஸில் கதாநாயகனாக நடிக்கிறார் அசோக் செல்வன்.
இந்த வெப் சீரிஸுக்கான படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் சென்னையில் துவங்கியது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் சவுந்தர்யா உள்ளிட்ட இந்த படக்குழுவினர் நேரில் சென்று வாழ்த்துக்கள் பெற்றனர்.
சௌந்தர்யாவை பொறுத்தவரை கோச்சடையான் என்கிற அனிமேஷன் படத்தில் தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டிருந்த அவர் இந்த வெப்சீரிஸ் மூலம் சினிமாவில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.