
சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்றாலே அது நடிகர் ரஜினிகாந்த்தை தான் குறிக்கும் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு நிகழ்விலும் எவ்வளவு பெரிய விஐபி கூட ரஜினிகாந்தின் பெயரை சூப்பர் ஸ்டார் என்று தான் உச்சரிப்பார்கள். அந்த அளவிற்கு இரண்டும் பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டன.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கடந்த இரண்டு படங்கள் பெரிய அளவில் போகாத நிலையில் நடிகர் விஜய்யின் படங்கள் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று வந்து வருகின்றன என்பதை காரணம் காட்டி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக வந்து விட்டார் என்று சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் போகிற போக்கில் கொளுத்தி போட அது மிகப்பெரிய விவாதமாக மாறி ரசிகர்களுக்குள் தேவையில்லாத சோசியல் மீடியா சண்டைகளையும் உருவாக்கி விட்டது.

அதே சமயம் சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இதுவரை அவரது படம் உள்பட ஏற்படுத்தி வைத்திருந்த முந்தைய சாதனைகளை எல்லாம் தகர்த்து எறிந்து மிகப்பெரிய அளவில் வசூலித்து வருகிறது. எத்தனை வருடங்கள் ஆனாலும் தான் இருக்கும் வரை தான் சூப்பர் ஸ்டார் என்பதை அழுத்தமாக இந்த வெற்றி மூலம் நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் பொதுவாகவே ரஜினிகாந்த் பற்றி பொதுமேடைகளில் கிண்டலாகவும் விமர்சனமாகவும் கருத்துக்களை கூறிவரும் நடிகர் சத்யராஜ் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான், அதில் எந்த மாற்றமும் இல்லை என ஆணித்தரமாக கூறி இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரஜினியின் நலம் விரும்பிகள் ஆதரவாளர்கள் யாராவது இப்படி கூறியிருந்தால் கூட அது பெரிதாக கவனத்தை ஈர்த்து இருக்காது. ஆனால் சத்யராஜ் கூறிய போது இந்த கருத்து மிகப்பெரிய கவனம் பெறுகிறது.

சத்யராஜ் வில்லனாக நடித்துள்ள அங்காரகன் என்கிற திரைப்படம் வரும் செப்டம்பர் எட்டாம் தேதி வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சத்யராஜ் பேசும்போது அவரிடம் இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சத்யராஜ், “சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறார்.. அதை மாற்றக்கூடாது.. என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் தான்.. ஏழிசை மன்னர், மக்கள் திலகம், நடிகர் திலகம் என காலத்திற்கேற்ப பட்டங்கள் மாறினாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் தான் சொந்தமானவர். ரஜினி சாரை மக்கள் திலகம் என்றால் ஏற்றுக் கொள்வார்களா ? தசாவதாரம் படத்தில் கமல் சார் சூப்பராக நடித்ததால் அவரை நடிகர் திலகம் என்று கூற முடியுமா ?

சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்.. உலக நாயகன் என்றால் கமல்.. தளபதி என்றால் விஜய்.. தல என்றால் அஜித்” என சமீப காலமாகவே ஓடிகொண்டிருந் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனது பேச்சை நிறைவு செய்தார் .