வார இதழ்களில் கடந்த பல வருடங்களுக்கு முன்பிருந்தே பெரும் தொடர்களை எழுதி பிரபலமானவர் எழுத்தாளர் அஜயன் பாலா. அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். 2017ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ள அஜயன் பாலா, தற்போது முழு நீள திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.
மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘கோலிசோடா 2’ புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு மற்றும் முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் அஜயன் பாலா, “மனதைத் தொடும் காதல் கதை ஒன்றை மலைப்பகுதியின் பின்னணியில் மக்களுக்கு சொல்ல உள்ளோம். கதையை மட்டுமே நம்பி என்னுடன் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் இப்படத்தை தயாரிக்கும் மருத்துவர் அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.