V4UMEDIA
HomeNewsKollywoodபிறமொழி நடிகர்களை புறக்கணிக்கவில்லை ; விளக்கம் அளித்த நாசர்

பிறமொழி நடிகர்களை புறக்கணிக்கவில்லை ; விளக்கம் அளித்த நாசர்

சமீப காலமாக தமிழ் திரையுலகில் குறிப்பாக பெப்சி தொழிலாளர்கள் குறித்த சர்ச்சையான செய்தி ஒன்று வெளியாகி வந்தது. அதாவது மற்றும் மொழியை சேர்ந்த நடிகர்களை தமிழில் நடிக்க வைக்க கூடாது, தமிழகத்திற்குள் தான் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்பது போன்று அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியதாக ஒரு தகவல் வெளியானது.

இது தமிழ் திரையுலகில் மட்டுமல்ல மற்ற மொழி திரையுலகினர் இடையேயும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இது குறித்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் வெளிப்படையாகவே தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் அளித்துள்ள விளக்கத்தில் “மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஒரு செய்தி மீடியாக்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் ஒரு தவறான செய்தி. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ் திரையுலகில் இருந்து இதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேவை இருக்கிறது. அதனால் இந்த சூழ்நிலையில் யாரும் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன்

தமிழ் திரையுலகில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் படங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற சில சீரியஸான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதே தவிர கலைஞர்களின் திறமை மற்றும் நடிகர்களை பற்றியது அல்ல.

எஸ்.வி ரங்காராவ், சாவித்திரி, வாணி ஸ்ரீ போன்ற மற்ற திரையுலகில் இருக்கும் திறமையாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அன்பும் மரியாதையுடனும் கவனிக்கும் அளவிற்கு தமிழ் திரையுலகம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. அன்பான சகோதரர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் இந்த செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.. உலக அளவில் அதை கொண்டு செல்வோம். நம்மால் செய்ய முடியும் நாம். அதை செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறோம். அதனால் ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.. என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments