நடிகர் சந்தானம் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக தன்னை உருவாக்கிக் கொண்டு சிம்பு படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றவர் சந்தானம்.
அதைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நாயகர்களுக்கு இணையான நகைச்சுவை கதாபாத்திரம் பெற்று நடித்த வந்தார். ஒரு கட்டத்தில் தனக்கும் ஹீரோவாகும் ஆசை வர நகைச்சுவை நடிகர் என்கிற அடையாளத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஹீரோவாக மாறி கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களாக தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
பல படங்கள் அவருக்கு ஹீரோவாக கை கொடுத்துள்ளன. சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறின. குறிப்பாக நகைச்சுவையை ஒதுக்கி வைத்து சீரியஸாக நடிக்க சந்தானம் முயற்சித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக இது சந்தானம் படம் போலவே இல்லை என்று சில படங்களுக்கு விமர்சனமும் எழுந்தது.
இந்த நிலையில் தான் வரும் ஜூலை 28ஆம் தேதி சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சந்தானத்துடன் கடந்த 18 வருடங்களாக இணைந்து பயணித்து வரும் பிரேம் ஆனந்த் என்பவர் இயற்றியுள்ளார். சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார்.
படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சந்தானம், “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக ‘டிடி ரிட்டர்ன்சை’ முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம்.
‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. டிடி ரிட்டர்ன்சும் மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.