நடிகை நயன்தாரா கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தாலும் தமிழ் தெலுங்கு மட்டுமே தனக்கு போதும் என்கிற அளவில் இங்கே தொடர்ந்து முன்னணி நடிகையாகவே முன்னணி ஹீரோக்களுடன் இணைந்தும் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜா ராணி மற்றும் பிகில் என இயக்குனர் அட்லீயின் படங்களில் நடித்து அவரது ஆஸ்தான நாயகியாக மாறிய நயன்தாராவுக்கு ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து தான் இயக்கி வரும் ஜவான் படத்திலும் கதாநாயகி வாய்ப்பு அளித்து அவரை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றார் அட்லீ.

இந்த படம் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா எந்தவிதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், எந்தவித தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.. தற்போது ஜவான் படத்தில் நயன்தாராவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா ஒரு ஆக்சன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது போஸ்டரில் இருந்து அழகாக தெரிகிறது. இதற்கு முன்னதாக பில்லா, இருமுகன் ஆகிய படங்களில் நயன்தாரா அதிரடி ஆக்சன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் வில்லனாக விஜய்சேதுபதியும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.