நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். அதே அளவுக்கு ரசிகர் பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் பெற்றுள்ளார் நடிகர் விஜய். தனது ரசிகர்களை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் ஒன்றிணைத்து நற்பணிகளை ஈடுபடுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட தமிழகமெங்கும் 234 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு பரிசுகள், விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இது தவிர அவரது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக சமீப காலங்களில் ரத்த தானம் செய்வதை வலியுறுத்தி விஜய் குருதியகம், கண்காணம் செய்வதை வலியுறுத்தி விஜய் விழியகம் மற்றும் ஏழை மக்களின் பசி தீர்க்கும் விஜய் விலையில்லா விருந்தகம் என ஒவ்வொரு பிரிவாக துவங்கி அதில் ஏழை மக்களுக்காக தனது ரசிகர்கள் மூலமாக உதவி வருகிறார்.

இந்த நிலையில் வரும் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாள் வருகிறது. இதை முன்னிட்டு விஜய் பயிலகம் திறந்து இரவு நேர பாடசாலையை உருவாக்குகிறார் விஜய்.
இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரும் ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திரு உருவ சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதையும் தனது விஜய் மக்கள் இயக்கம் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார் விஜய்.
அவர் அரசியலுக்கு வரப்போவதாக பேசப்பட்டு வரும் நிலையில் அவரது ஒவ்வொரு அடியும் அதை நோக்கியே இருப்பது அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது